"என் அங்கம் முழுவதும் வலி, பர்மிய ரோஹிஞ்சா பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை" என்று தலைப்பிடப்பட்டிருக்கும், அந்த 37 பக்க அறிக்கையில் பர்மிய ராணுவம் கூட்டு வன்புணர்வில் ஈடுபட்டதை மட்டுமல்லாமல், ரோஹிஞ்சா மக்கள் மீதான வன்முறை, கொடூரம் மற்றும் அவர்களை அவமானப்படுத்திய விதம் குறித்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. தங்கள் குழந்தைகள், கணவன் மற்றும் பெற்றோர் தங்கள் கண் முன்பு கொல்லப்பட்டதை பல பெண்கள் விவரித்துள்ளனர். தங்கள் பிறப்புறுப்பு சிதைந்த மற்றும் காயமடைந்த நிலையில் வங்கதேசம் தப்பி வந்ததை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள் அதில் விவரித்துள்ளனர்.
"பர்மிய ராணுவத்தால், ரோஹிஞ்சா பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்படுவது இன சுத்திகரிப்பின்போது பிரதானமான மற்றும் அழிவை உண்டாக்கும் செயலாக இருந்தது," என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் பெண்கள் உரிமைகளுக்கான அவசரநிலை குறித்த ஆய்வாளரும், அந்த அறிக்கையைத் தயாரித்தவருமான ஸ்கை வீலர் கூறியுள்ளார். பர்மிய காவல் படையினர் 11 பேர் கொல்லப்பட்ட, ஆகஸ்ட் 25, 2017 அன்று அரக்கன் ரோஹிஞ்சா சால்வேஷன் ஆர்மி (அர்சா) தாக்குதல் நடத்தியது முதல், ரகைன் மாகாணத்தின் வடக்குப் பகுதியில் பர்மிய ராணுவம் மேற்கொண்டுள்ள வன்முறை, கொலைகள், வன்புணர்வு, கைதுகள், கிராமங்கள் எரிப்பு ஆகியவற்றில் இருந்து தப்ப அண்டை நாடான வங்கதேசத்தில் சுமார் 6 லட்சம் ரோஹிஞ்சாக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
சர்வதேச சட்டங்களின்படி, இவை மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள் என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ளது. வங்கதேசத்துக்கு தப்பி வந்த 52 பெண்களிடம் அந்த அமைப்பு பேசியது. அவர்களில், 18 வயதுக்கும் குறைவான 3 பெண்கள் உள்பட 29 பேர் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டவர்கள். ரகைன் மாகாணத்தில் இருந்த ரோஹிஞ்சா பெண்கள் பர்மிய ராணுவத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டபோதும், அதற்கு முன்னதாகவும் அச்சுறுத்தும் வகையிலும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர்.
ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் அறிக்கையில் வன்புணர்வு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் அனைவரும் ராணுவ உடை அணிந்த பர்மிய காவல் படையினர் ஆவர் என்று கூறப்பட்டுள்ளது. ரகைன் மாகாணத்தின் கிராமங்களில் வாழும் பூர்வ குடிகளும் ராணுவத்தினருடன் இணைந்து வல்லுறவு செய்தது மட்டுமல்லாமல், ரோஹிஞ்சாக்களின் உடைமைகளையும் சூறையாடியுள்ளனர்.
தன்னை நிர்வாணப்படுத்தி, வீட்டில் இருந்து இழுத்துச் சென்று ஒரு மரத்தில் கட்டிவைத்து சுமார் 10 பேர் தன்னை வன்புணர்வு செய்ததாக, ஹாதி பாரா எனும் கிராமத்தைச் சேர்ந்த 15 வயதாகும் சிறுமி கூறியுள்ளார். "என்னை அந்த இடத்திலேயே அவர்கள் விட்டுச் சென்றனர். நான் அங்கு விழுந்து கிடந்ததைப் பார்த்த எனது சகோதரியும் சகோதரனும் நான் இறந்து விட்டதாகவே நினைத்தனர்," என்று அவர் கூறியுள்ளார். ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பிடம் பேசிய ஒரு பெண்ணைத் தவிர அனைவருமே கூட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஆறு பேர், தங்களை பர்மிய காவல் படையினர் ஒரு குழுவாக நிற்க வைத்து கூட்டு வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக கூறியுள்ளனர். வங்கதேசத்தில் இருக்கும் தொண்டு நிறுவனங்கள் நூற்றுக் கணக்கான பாலியல் வல்லுறவு சம்பவங்களை ஆவணப்படுத்தியுள்ளனர். ஆனால், பாதிக்கப்பட்ட பெரும்பாலான பெண்கள் கொல்லப்பட்டது, அவர்கள் வெளியில் சொல்லாதது உள்ளிட்ட காரணங்களால் உண்மையான எண்ணிக்கையை கணிக்க முடியவில்லை.
வல்லுறவு செய்யப்பட்ட பெண்களில் மூன்றில் இரண்டு பங்கினர் தாங்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானதை வெளியில் சொல்லவில்லை. "உரிய மருத்துவ உதவிகள் இல்லாமல் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அந்த பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்," என்று கூறியுள்ள வீலர் "வங்கதேச அரசும், தொண்டு நிறுவனங்களும் ரோஹிஞ்சா பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதை வெளிப்படுத்த ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.
மியான்மர் அரசு ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை உடனடியாக நிறுத்துவதுடன், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் உண்மை கண்டறியும் குழு உள்ளிட்ட சர்வதேச விசாரணை அமைப்புகளுக்கு ரகைன் செல்வதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. வங்கதேச அரசும் சர்வதேச தொண்டு நிறுவனங்களும் உடனடியாக ரோஹிஞ்சா அகதிகளுக்கு உதவிக்கரம் நீட்டியதாகவும், பாலியல் வல்லுறவு செய்யப்பட்டவர்களுக்கு உதவி புரிந்ததாகவும், சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசுகள் பர்மிய ராணுவ அதிகாரிகளுக்கு பயந்த தடை விதிக்க வேண்டும் என்றும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கோரிக்கை விடுத்துள்ளது. மியான்மருக்கு ஆயுத விற்பனை செய்ய ஐ.நா பாதுகாப்பு சபை தடை விதிக்க வேண்டும் என்றும், இந்த விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ளது.
No comments:
Post a Comment