போலீஸ் போல வேடம் அணிந்த ஒரு துப்பாக்கிதாரி ஆஃப்கன் தலைநகர் காபூலில் உள்ள ஒரு தொலைக்காட்சி நிலையத்தை தாக்கியதில், குறைந்தது இரண்டு பேர் இறந்தனர் என்று போலீஸ் தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான அந்த நிறுவனத்தின் பெயர் ஷாம்ஷட் தொலைக்காட்சி.
ஷாம்ஷட் தொலைக்காட்சி நிலையத்திற்குள் தாக்குதல்காரர்கள் உட்புகும் முன்பு, அந்த நிலையத்தை நோக்கி குண்டுகளை வீசி உள்ளனர்.
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் குழுவினர், இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர்.
அண்மைக் காலங்களில் ஐ.எஸ் அமைப்பு மற்றும் தாலிபான்களின் தாக்குதலுக்கு தொடர்ந்து காபூல் உள்ளாகிவருகிறது.
ஒரு பாதுகாப்பு அதிகாரி தாக்குதலில் ஏற்பட்ட மரணங்கள் குறித்து உறுதிபடுத்தி உள்ளார். 20 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
டொலொ நியூஸுக்கு பேட்டி அளித்த ஷாம்ஷட் தொலைக்காட்சியின் செய்தி இயக்குநர் அபிட் எஹ்சாஸ், "இது ஊடக சுதந்திரம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல். ஆனால், அவர்களால் எங்களை மெளனமாக்கிவிட முடியாது" என்று கூறியுள்ளார்.
ஷாம்ஷட் தொலைக்காட்சி, நடப்புச் செய்திகள் உட்பட பலவிதமான நிகழ்ச்சிகளை பஷ்டோ மொழியில் ஒளிப்பரப்பி வருகிறது.
இந்த தொலைக்காட்சி நிலையம் பிபிசியின் பங்குதாரர்களில் ஒன்றாகும்.
பாதுகாப்பாற்ற சூழலில் ஊடகவியலாளர்கள்:
பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக தொழிலாளர்களுக்கு உலகில் மிகவும் ஆபத்தான நாடுகளில் ஆப்கானிஸ்தானும் ஒன்று.
- இந்த ஆண்டு மே மாதம், காபூலில் நிகழ்ந்த ஒரு குண்டு வெடிப்பில், பிபிசி தொலைக்காட்சியின் ஓட்டுநர் உட்பட இருவர் இறந்துள்ளார்கள். இந்த தாக்குதலில் ஆஃப்கனின் 1டிவி மோசமாக சேதமடைந்தது.
- அதே மே மாதம், ஜலாலாபாத்தில் உள்ள ஆஃப்கன் அரசு தொலைக்காட்சி மீது ஐ.எஸ் அமைப்பு தாக்குதல் தொடுத்தது. இதில் ஆறு பேர் இறந்தனர்.
- கடந்த ஆண்டு தாலிபன்கள் மேற்கொண்ட தற்கொலை தாக்குதலில் டொலொ தொலைக்காட்சியின் ஏழு ஊழியர்கள் மரணமடைந்தனர்.
No comments:
Post a Comment