இலங்கையில் நாடு முழுவதிலும் இந்த வருடத்தில் இதுவரையில் ஒரு இலட்சத்து 67 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். 395 டெங்கு மரணங்களும் பதிவாகியிருப்பதாக சுகாதார அமைச்சு கூறுகின்றது
கடந்த வருடத்தில் நாடு முழுவதிலும் 55,150 நோயாளர்கள் இனம் காணப்பட்டிருந்தனர். 97 மரணங்களும் பதிவாகியிருந்தன . இந்த வருடத்தில் இதுவரையில் 1,67,198 நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். 395 மரணங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.
கடந்த வருட தரவுகளுடன் ஒப்பிடும் போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் மூன்று மடங்கு அதிகரிப்பை காண முடிகின்றது. உயிரிழப்புகளும் நான்கு மடங்காக அதிகரித்துள்ளது
2010ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இந்த ஆண்டிலே கூடுதலான டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். கூடுதலான டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளன.
இந்த வருடத்தில் மே, ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் தொடர்ச்சியாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்பட்டன. ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னர் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து.
தற்போது மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு கொசுக்களின் பெருக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு கூறுகின்றது.
இதனையடுத்து இன்று வியாழக்கிழமையும் நாளை வெள்ளிக்கிழமையும் தேசிய ரீதியாக டெங்கு ஒழிப்பு சிறப்பு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல், புத்தளம், இரத்தினபுரி, கேகாலை, யாழ்ப்பாணம், கல்முனை, கண்டி, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கள் தொடர்ந்தும் டெங்கு அச்சுறுத்தல் நிலவும் மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் தினைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது..
அனைத்து அரச நிறுவனங்களின் வளாகங்கள், வழிபாட்டுத் தளங்கள், பாடசாலைகள் புதிய கட்டட நிர்மாணப்பணிகள் முதலான டெங்கு கொசுக்கள் பரவக்கூடிய பகுதிகள் கண்டறிந்து துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சை மேற்கோள் காட்டி அரசாங்க தகவல் துறை கூறுகின்றது.
No comments:
Post a Comment