கடந்த திங்கள் கிழமை தங்கள் நாட்டில் இருந்து தப்பி வந்தபோது இவர் வட கொரிய ராணுவத்தினரால் பல முறை சுடப்பட்டார். அவரது உடல் நிலை தற்போது நிலையாக இருந்தாலும், அவரது உடலில் இருக்கும் ஏராளமான புழுக்களால் அவரது காயங்கள் ஆறுவதும், உடல் நிலையும் மோசமாக ஆவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வட கொரியாவில் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது குறித்த அரிதான ஒரு பார்வையைத் தருவதாக இருக்கிறது அவரது உடல் நிலை.
இந்த அளவு புழுக்களை தமது 20 ஆண்டுகால அனுபவத்தில் பார்த்ததில்லை என்கிறார் தென் கொரிய டாக்டரான லீ குக்-ஜாங். நோயாளியின் உடலில் இருந்து நீக்கப்பட்டதில் மிக நீளமான புழு 27 செ.மீ. நீளமானது என்கிறார் அவர்.
ஒட்டுண்ணிகள் எப்படி உடலுக்குள் வருகின்றன?
மாசடைந்த உணவை உட்கொள்வதன் வாயிலாகவோ, ஒரு பூச்சி கடிப்பதன் வாயிலாகவோ, தோலின் வழியாக ஓர் ஒட்டுண்ணி உள்ளே நுழைவதாலோ மனித உடலில் ஒட்டுண்ணிப் புழுக்கள் உண்டாகின்றன.
வடகொரிய ராணுவ வீரர் விவகாரத்தில் முதலில் சொன்ன காரணமே பொருந்துவதற்கு வாய்ப்பு அதிகம். மாசடைந்த உணவை உட்கொள்ளும்போது உள்ளே செல்லும் ஒட்டுண்ணிகள் புழுவாகின்றன.
மனிதக் கழிவுகளையே வடகொரியா உரமாகப் பயன்படுத்துகிறது. உரிய முறையில் பதப்படுத்தப்படாத மனிதக் கழிவுகள் அப்படியே உரமாகப் பயன்படுத்தப்படும்போது, குறிப்பாக காய்கறி உற்பத்தியில் பயன்படுத்தும்போது, பிறகு காய்கறிகளை அப்படியே சமைக்காமல் உட்கொள்ளும்போது ஒட்டுண்ணிகள் வாய்வழியாக குடலுக்குச் செல்லும்.
சில ஒட்டுண்ணிகள் ஒன்றும் செய்யாமல் அப்படியே இருந்துவிடும். ஆனால், சில ஒட்டுண்ணிகளால் உயிருக்கே ஆபத்தும் ஏற்படலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
வடகொரிய சுகாதார நிலையைக் காட்டுகிறதா இது?
வடகொரியா ஒரு ஏழை நாடு. எந்த ஏழை நாட்டையும்போலவே இங்கேயும் சுகாதாரச் சிக்கல்கள் உண்டு என்கிறார் கூக்மின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அந்திரேய் லங்கோவ்.
வடகொரியாவில் இருந்து தப்பி வருகிறவர்களின் மருத்துவப் பதிவேடுகளைப் பார்வையிட்ட தென்கொரிய ஆய்வாளர்கள், ஹெப்படைட்டிஸ் பி, ஹெப்படைட்டிஸ் சி, காசநோய், ஒட்டுண்ணித் தொற்றுகள் ஆகியவை தென்கொரியாவை ஒப்பிடும்போது வடகொரியாவில் அதிகம் என்கிறார்கள்.
No comments:
Post a Comment