இந்தியாவுக்கு தற்போது சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அவ்வணியுடனான தொடர்கள் ஆரம்பமாக முன்னர் இந்திய வாரிய பதினொருவர் அணியுடன் மோதியிருந்த இந்தப் பயிற்சி ஆட்டம் நேற்று (11) கொல்கத்தாவின் ஜடாவ்பூர் பல்கலைக்கழக மைதானத்தில் தொடங்கியிருந்தது.
எதிர் தரப்பினால் துடுப்பாடப் பணிக்கப்பட்டிருந்த இலங்கை அணி முதல் நாள் ஆட்ட நேர நிறைவின் போது அஞ்செலோ மெதிவ்ஸ், திமுத் கருணாரத்ன, சதீர சமரவிக்ரம மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோரின் அரைச்சதங்களுடன் முதல் இன்னிங்சுக்காக 88 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 411 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
களத்தில் நிரோஷன் திக்வெல்ல 73 ஓட்டங்களுடனும் ரோஷென் சில்வா 36 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது நின்றிருந்தனர்.
போட்டியின் இரண்டாம் நாளில் இலங்கை அணித்தலைவர் தினேஷ் சந்திமால் தொடர்ந்து துடுப்பாடாமல் தமது இன்னிங்சை முடித்துக்கொள்வதாக அறிவித்தார். இதனால் போட்டியின் முதல் நாளில் துடுப்பாட்டத்தின் போது ஓய்வெடுத்துக் கொண்ட அஞ்செலோ மெதிவ்ஸ், திமுத் கருணாரத்ன மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் ஆட்டமிழந்ததாக கருதப்பட்டு இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் 411 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் முடிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இந்திய (கிரிக்கெட் கட்டுப்பாட்டு) வாரிய தலைவர் தரப்பு இன்றைய நாளில் வழக்கத்துக்கு மாறாக பந்து வீசிய துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமான்னவின் பந்து வீச்சுக்கு தடுமாறியது. திரிமான்னவின் எதிர்பாராத பந்துவீச்சின் காரணமாக தொடக்கத்தில் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய தரப்பினர் தடுமாறியிருந்தனர்.
எனினும், நம்பிக்கையான முறையில் ஆடத் தொடங்கிய இந்திய வாரிய பதினொருவர் அணியின் தலைவர் சஞ்சு சாம்சன் சரிவு ஒன்றிலிருந்து தனது தரப்பினை மீட்டெடுத்துக் கொண்டார்.
இதனையடுத்து சீரான ஓட்ட இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்திய தரப்பு ஒரு நல்ல நிலையை அடைந்து கொண்டது.
இதேவேளை இலங்கைப் பந்துவீச்சாளர்களை சாமர்த்தியமாக எதிர்கொண்ட சாம்சன் சதமும் விளாசி அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு முதுகெலும்பாக செயற்பட்டிருந்தார்.
இந்திய வாரிய தலைவர் பதினொருவர் அணியின் ஐந்தாவது விக்கெட்டாகப் பறிபோயிருந்த சாம்சன் 143 பந்துகளுக்கு 19 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உள்ளடங்களாக 128 ஓட்டங்களைச் சேர்த்திருந்தார்.
இதனையடுத்து இந்தியத் தரப்பு மேலதிக விக்கெட்டுக்களை பறிகொடுக்காது 75 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 287 ஓட்டங்களைக் குவித்திருந்த போது போட்டியின் இறுதி நாள் ஆட்ட நேரம் முடிவடைந்தது. இதனால் போட்டி சமநிலை அடைந்தது.
இந்திய வாரியத் தலைவர் தரப்பின் துடுப்பாட்டத்தில் ரோஹன் பிரேம் 39 ஓட்டங்களையும், ஜிவான்ஜோட் சிங் 35 ஓட்டங்களையும் பெற்று இந்திய வாரிய பதினொருவர் தரப்புக்கு வலுச் சேர்ந்திருந்தனர்.
இலங்கை அணியின் பந்து வீச்சில் லஹிரு திரிமான்ன 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம மற்றும் தில்ருவான் பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.
இந்த பயிற்சி போட்டியை சமநிலையில் முடித்திருக்கும் இலங்கை அணி அடுத்ததாக எதிர்வரும் 16 ஆம் திகதி (வியாழன்) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவிருக்கும் இந்திய அணியுடான டெஸ்ட் போட்டியில் மோதவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை – 411/9d (88) – சதீர சமரவிக்ரம 74(77), நிரோஷன் திக்வெல்ல 73*(59), அஞ்செலோ மெதிவ்ஸ் 54(93), திமுத் கருணாரத்ன 50(62), தில்ருவான் பெரேரா 48(44), ரோஷென் சில்வா 36*(53), சந்தீப் வாரியர் 60/2(15), ஆகாஷ் பண்டாரி 111/2(23)
இந்திய வாரிய தலைவர் பதினொருவர் அணி – 287/5 (75) – சஞ்சு சாம்சன் 128(143), ரொஹான் பிரேம் 39(61), ஜிவன்ஜோட் சிங் 35(99), லஹிரு திரிமான்ன 22/6(6)
முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.
No comments:
Post a Comment