இந்திய அணிக்கு எதிராக நவம்பர் மாதம் 16 ஆம் திகதி கொல்கத்தாவில் ஆரம்பமாகவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கும் 15 வீரர்கள் அடங்கிய இலங்கை குழாமை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இன்று (5) வெளியிட்டுள்ளது.
இத்தொடருக்கான இலங்கை அணியில் வலது கை துடுப்பாட்ட வீரரான தனஞ்சய டி சில்வா மற்றும் மேற்கிந்திய தீவுகள் A அணிக்கு எதிராக அண்மையில் திறமையான ஆட்டத்தினை வெளிப்படுத்திய தசுன் சானக்க ஆகியோர் மீள அழைக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கியிருந்த கெளஷால் சில்வா, குசல் மெண்டிஸ் மற்றும் நுவன் பிரதீப் ஆகியோர் இந்திய அணிக்கு எதிரான இத்தொடரில் உள்ளடக்கப்படவில்லை.
இலங்கை அணியானது இறுதியாக தினேஷ் சந்திமால் தலைமையில் பாகிஸ்தான் அணியை அவர்களது இரண்டாம் தாயகமான ஐக்கிய அரபு இராச்சியத்தில் முதற் தடவையாக டெஸ்ட் தொடரொன்றில் 2-0 என வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணிக்காக கடந்த காலங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டிய நிலையில் காயமுற்றிருந்த அசேல குணரத்ன மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோர் தற்போது பூரண உடற்குதியைப் பெற்றிருக்கின்ற போதிலும், டெஸ்ட் போட்டிகளில் போதிய பயிற்சிகளை அண்மைய நாட்களில் பெறாத காரணத்தினால் அவர்களுக்கு இக்குழாமில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் விளையாடாது போயிருந்த இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவரான அஞ்செலோ மெதிவ்ஸ் தனது காயத்தில் இருந்து முழுமையாக மீண்டிருப்பதால் இந்தியாவுக்கான இந்த டெஸ்ட் தொடரில் இலங்கையின் மத்தியவரிசையை பலப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு தற்போது கெளஷால் சில்வா அணியில் நீக்கப்பட்டிருப்பதால் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக சதீர சமரவிக்ரம செயற்படுவார் என நம்பப்படுகிறது.
இலங்கை அணியானது இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பாக முதல் டெஸ்ட் போட்டி நடைபெற ஏற்படாகியிருக்கும கொல்கத்தாவில் மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி ஒன்றில் இந்திய கிரிக்கெட் சபை பதினொருவர் அணியுடன் விளையாடவுள்ளது. இதனையடுத்து இரண்டாம், மூன்றாம் டெஸ்ட் போட்டிகளுக்காக இலங்கை நக்பூர் மற்றும் டெல்லி ஆகிய நகரங்களுக்கு பயணிக்கவுள்ளது.
முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெறவிருக்கும் உலகின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் மைதானமான கொல்கத்தாவிலேயே 1996 ஆம் ஆண்டு உலக கிண்ண அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி இந்தியாவை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் குழாமில் உள்ளடக்கப்பட்டும் அத்தொடருக்கான போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெறாத மத்திய வரிசை வீரரான ரோஷென் சில்வா மற்றும் விஷ்வ பெர்னாந்து ஆகியோர் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தத்தமது இடங்களில் நீடிக்கின்றனர்.
இத்தொடருக்கான இலங்கை அணி நவம்பர் மாதம் 8 ஆம் திகதி இந்தியாவுக்கு பயணிக்கின்றது.
இலங்கை டெஸ்ட் குழாம்
தினேஷ் சந்திமால் (அணித்தலைவர்), திமுத் கருணாரத்ன, சதீர சமரவிக்ரம, தனஞ்சய டி சில்வா, அஞ்செலோ மெதிவ்ஸ், நிரோஷன் திக்வெல்ல, லஹிரு திரிமான்ன, ரோஷென் சில்வா, தசுன் சானக்க, தில்ருவான் பெரேரா, ரங்கன ஹேரத், லக்ஷான் சந்தகன், சுரங்க லக்மால், லஹிரு கமகே, விஷ்வ பெர்னாந்து
No comments:
Post a Comment